செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகள் வந்தன. இயக்கம் உடைந்து விட கூடாது என்பதற்காக சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்று கொண்டதாகவும், கழகம் உடைந்து விட கூடாது என்பதற்காகவே அமைதி காத்ததாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த தேர்தல்களில் பாஜக கூட்டணி வைக்க வலியுறுத்தியும் அதை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக குற்றச்சாட்டையும் செங்கோட்டையன் வைத்தார். கடைசியாக அதிமுகவின் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் செங்கோட்டையன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை நிரூபித்துள்ளதாக சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் என்பதை கழகத்தின் மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்துள்ளதாகவும், அவரின் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை காட்டுகிறதாகவும் சசிகலா புகழ்ந்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி அதிமுகவை அழிக்க எந்த விதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்று படுவோம், வென்று காட்டுவோம் என்றும் தனது அறிக்கையில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.