மோடி பீகாரில் ரூ.10 ஆயிரம் தந்தது போல் இங்கு 15 ஆயிரம் ரூபாய் தரவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தாய்மார்கள் தயாராக இருக்க சீமான் அறிவுறுத்தி உள்ளார்.

‘செக்கிழுத்த செம்மல்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 89 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:

இப்படி பணநாயக கொள்ளை கூட்டத்திடம் எங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்லவா? முன்னோர்கள் போராடிச் செத்தார்கள். எங்களுக்கு இருக்கக் கூடிய கடைசி உரிமை வாக்கு தான். அதையும் பறிக்கிறார்கள். அதைப் போராடிப் பெற வேண்டிய நிலைமைக்கு எங்களைத் தள்ளியுள்ளது நாடு. பகத்சிங் முன் வைத்த முழக்கம் விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளாகியும் அப்படியே உள்ளது.

வருவாய் துறையில் பணியாற்றுபவர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள். அவர்களுக்கே எஸ்ஐஆர் பணி சிரமம் என்றால் அடித்தட்டில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோரை பணி அமர்த்தியுள்ளார்கள். தகுதி வாய்ந்த அதிகாரிகளின் சான்றிதழ்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களெல்லாம் இந்த பணியைச் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் தானா?

பாஜக இந்த எஸ்ஐஆரை கொண்டு வருகிறது. செயல்படுத்துவது யார்? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இதை செயல்படுத்த முடியாது என்று மக்களை திரட்டி பேரணி செல்லும் போது, திமுக ஒப்புக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, உங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளை கூப்பிட்டு பேசி விட்டு இவ்வளவு தீவிரமாக எஸ்ஐஆரை செயல்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

பிஎல்ஒ அலுவலர்களை பணியமர்த்தி விட்டு, உங்களது கட்சிக்காரர்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது கட்சி வாக்குகளைத் தவிர மற்ற வாக்குகளை தூக்கி விடும் பணியை தவிர வேறு என்ன நடக்கும்? ஈரோடு கிழக்கில் கள்ள வாக்கு பதிவு செய்யப்பட்டதா? இல்லையா? வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? பிறகு எஸ்ஐஆரை திருத்தி என்ன நேர்மை வரப் போகிறது?

எனக்கு இருக்கும் கடைசி உரிமை இந்த வாக்கு தான். அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு என்னை தள்ளிவிட்டார்கள். தவறு நடப்பதை திருத்துவதற்குப் பெயர் தான் திருத்தம். ஒரு நிலத்தில் களையை மட்டும் பிடுங்காமல் மொத்தமாக அழித்துவிட்டு, மறுபடியும் நடுவதாக சொல்லும் நீங்கள் முட்டாள்களா? நாங்களா?

யார் இதில் பைத்தியம்? இறந்து பல ஆண்டுகள் ஆனவர்களின் வாக்கை நீக்குமாறு பலமுறை எழுதிக் கொடுத்தும், இப்போதும் அவருக்கு விண்ணப்பம் வருகிறது என்பது என்ன மாதிரியான செயல்?

பீகாரில் 81 லட்சம் பேர் ஏன் விடுபட்டார்கள்? ஒரு வீட்டில் 100 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை எஸ்.ஐ.ஆருக்கு பின்னர் பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்கு திருட்டு திருத்தமாகத் தான் இருக்கிறது.

பீகாரில் எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்னதாக கூறுகிறீர்கள். கள்ள ஓட்டு போட்டால் வாக்கு சதவீதம் அதிகரிக்க தான் செய்யும். 81 லட்சம் பேர் வெளியே நிற்கிறார்களே ஏன் என்று சொல்ல முடிகிறதா?

போராடும் திறனை ஒழித்து விட்டு நீ என்ன நேர்மையாளன்? கடைசி நேரத்தில் மக்களின் வங்கிக்கணக்கில் பத்தாயிரம் போட்டு விட்டு வாக்கை பறிக்கும் நீ என்ன நேர்மையாளன்? இவர்கள் 1000 கொடுக்கிறார்கள். அவர்கள் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள். 5 ஆண்டு ஆட்சியில் அந்த 10 ஆயிரத்தை கொடுக்காமல் இப்போது ஏன் கொடுத்தார்கள்?

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு திமுகவினர் செல்லும் போது அந்த வீட்டின் வரவேற்பில் எனது புகைப்படமுமோ, தம்பி விஜய் படமோ இருந்தால் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? திமுக செல்லும் போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படம் இருந்தால் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பாஜகவினர் செல்லும் போது இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? எப்படிப்பட்ட ஜனநாயகம் இது. கொளத்தூரில் கள்ள ஓட்டு இருக்கிறது என்றால், அவ்வளவு நேர்மையாளர்கள் அந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டியது தானே? கொளத்தூரில் மட்டும் தான் போலி வாக்காளர்கள் உள்ளார்களா?

பிஜேபி வென்ற தொகுதிகளில் எல்லாம் போலி வாக்காளர்கள் இல்லையா? திருத்தம் செய்வது என்றால் அதற்கு கால அவகாசம் எடுத்து செய்ய வேண்டியது தானே? வாக்காளர்கள் எங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தோம்‌. இப்போது ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள்.

பாஜகவிடம் நாட்டையே கொடுத்து நாசமாக்கி விட்டார்கள். இந்த அரை கிரவுண்டையும் முடித்து விட்டுச் செல்லுங்கள். தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வாக்காளர்கள் இல்லை. அனைவரும் பாஜகவின் வாக்காளர்கள். ஹிந்தியை திணித்தால் எதிர்க்கிறோம் என்பதால் ஹிந்திகாரர்களை திணிக்கிறார்கள்.

இறைவழிபாட்டை விமர்சித்த இயக்கங்கள் திரை வழிபாட்டை போற்ற வைத்தன. கடவுள் வழிபாட்டைவிட கதாநாயக வழிபாடு சிறந்தது என கட்டமைத்து விட்டார்கள். மோடி பீகாரில் 10 ஆயிரம் போட்டது போல், நமது ஆட்கள் 15 ஆயிரம் போடவும் வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் வங்கியில் கணக்கை ஆரம்பித்து விடச் சொல்ல வேண்டும்.

பீகாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடும். ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. கூடுதலாக 2 லட்சம் கோடி கடன் அதிகரிக்க வேண்டியது தானே. காங்கிரஸ் கட்சி காசு கொடுத்ததால் அண்ணா தோற்றுவிட்டார். காசு கொடுப்பதை அண்ணா விமர்சித்துப் பேசினார். ரூ.2 கொடுத்ததற்கே விமர்சித்த அண்ணாவின் பிள்ளைகள் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள்.

உள்ளத்திலும், கோயிலிலும் தாமரை மலர வேண்டும் என கூறுகிறார்கள். தாமரை தண்ணீரிலேயே மலர்வதில்லை. எங்கள் ஊரில் வெங்காய தாமரை தான் வளர்கிறது” என்று சீமான் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version