சென்னையை அடுத்த பனையூரில் தவெகவில் இன்று செங்கோட்டையன் சேர்ந்தார். அதன்பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அதிமுகவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவன் நான். புரட்சித் தலைவரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவன் நான். அவர் அளித்த பணிகளை எம்ஜிஆர் பாராட்டும் அளவுக்கு செய்துள்ளேன். என்னை கட்டித் தழுவி எம்ஜிஆர் பாராட்டியுள்ளார். அப்போது எதிர்க்கட்சியினர் (திமுக) அதிமுக 100 நாள்களுக்கு கூட நீடிக்காது என விமர்சித்தனர். ஆனால் நடந்தது வேறு. அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்ஜிஆர். 3 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோதும் தேர்தலில் வென்று நிரந்தர முதல்வர் என்ற சாதனையை படைத்தவர். அவர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றினேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி நீடித்தது. ஆனால் பிறகு கட்சி சிதறுண்டது.

இதை கருத்தில் வைத்து, கெட்சி ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அக்கருத்து நிராகரிக்கப்பட்டது. நான் என்ற ஆணவம் கூடாது. இதை ஆண்டவர் பொறுத்து கொள்ள மாட்டார்.

50 ஆண்டுகளாக அதிமுகவுக்கு பணியாற்றினேன். தேவர் ஜெயந்திக்கு சென்றபோது, அங்கு வந்தோரை சந்தித்ததால் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். எனது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.

இன்று திரமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல. 2 கட்சிகளும் ஒன்றாக சேர்ந்தே செயல்பட்டு வருகின்றன. இதை ஊடகத்தினரும் அறிவார்கள்.

விஜய் தவெக எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். குழந்தைகளும் விஜய்யின் ஆதரவாளர்கள்தான். தமிழகத்தில் புதிய மாற்றம் வர வேண்டும். தூய்மையான ஆட்சி தேவைப்படுகிறது. அந்த ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும். இந்த எண்ணம் மக்கள் மனதில் நீண்ட காலமாக உள்ளது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இன்னொரு கட்சி வர வேண்டும். 2026ல் புனித ஆட்சி உருவாவதற்கு தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவார். 2026ல் மாபெரும் புரட்சி ஏற்பட்டு தேர்தலில் அவர் வெற்றி பெறுவார். தமிழகத்தில் அவர் ஆட்சியமைப்பார் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version