அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு அக்கட்சி தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடும் அதிருப்தியும் காணப்பட்டு வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்ததால் பல தலைவர்கள் அதிமுகவில் இருந்து விலகியும் வருகின்றனர். அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தார்.

கட்சியின் பொதுச் செயலாளரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்தது, அவரது பெயரை பொது மேடையில் தவிர்த்தது என செங்கோட்டையனின் செயல், அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை தனது ஆதரவாளர்களுடன் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து விடுவாரோ? அல்லது ஓபிஎஸ், டிடிவி போன்று தனியாக சென்று விடுவாரோ என்றெல்லாம் பேசப்பட்டது.

இது குறித்து நேற்று முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இபிஎஸ் 10 நாட்களுக்குள் ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்தார். இது குறித்து திண்டுக்கலில் முகாமிட்டுள்ள இபிஎஸ்ஸை சந்தித்த அவரது ஆதரவாளர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில், செங்கோட்டையனின் கருத்து புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கழகச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் செங்கோட்டையன் எம்.எல்.ஏ-வை இன்று முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக” அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version