அதிமுகவில் சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவரது பேச்சு பரபரப்பான நிலையில் மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணியில் இருந்து ஏன் விலகினேன் என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு, நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவு அடிப்படையில் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். இதை நாங்கள் நிதானமாக யோசித்து எடுத்த முடிவு.
அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியை சரியாக கையாண்டார். ஆனால், நயினார் நாகேந்திரனுக்கு இந்த கூட்டணியை கையாள தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆணவமாக பேசியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரனே காரணம்.
அமமுக கூட்டணியில் அதிமுக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அதிமுக தான் முடிவு எடுக்க வேண்டும். அதிமுக ஒன்றிணைய செங்கோட்டையன் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியில் அமமுக இருக்கும். தேர்தலில் போட்டியிட பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனாலும், தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். அரசியலில் புதிய கூட்டணி உருவாகும்” என பேசினார்.