அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறிவந்த செங்கோட்டையன், இப்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோவையில் இருந்து சென்னைக்கு பறந்திருக்கும் செங்கோட்டையன், தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்யப்போவதாகவும், விஜயை சந்தித்த பின்னர் அவரது கட்சியில் நாளை இணையப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 30ஆம் தேதி கோபி செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை மீண்டும் தொடங்குகிறார். அதற்கு முன்னதாகவே, செங்கோட்டையன் தனது முடிவை அறிவிப்பார் எனச் சொல்லப்படுகிறது.
செங்கோட்டையன் மட்டுமின்றி முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் விஜய் பக்கம் சாயப்போவதாக பேச்சு எழுகிறது. அதிமுகவின் முகங்களாக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் செங்கோட்டையன். மேலும் ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரப் பயணத்தை வகுத்துத் தந்த அனுபவமும் கொண்டவர்.
கொங்கு மண்டல களத்தில் அவரது செயல்பாடு எப்போதும் கட்சி தலைமைக்கு திருப்தியை அளித்தே வந்திருப்பதாக கூறும் அரசியல் விமர்சகர்கள், அதிமுகவில் மூத்த தலைவராக அரை நூற்றாண்டு காலம் அனுபவம் வாய்ந்தவரான செங்கோட்டையன், விஜய் பக்கம் சென்றால் அது தேர்தல் காலத்தில் தவெகவுக்கு பெரும் பலமாக இருக்கும் என்கின்றனர்.
