கட்சியைக் காப்பாற்றவே கதறும் தீர்ந்து போன சக்தி, எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
தவெக ஐ.டி.விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ?
வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?
கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?
குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?
இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.
