பேரறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் பாஜகவினர் விமர்சிக்கிறார்கள் என்று இன்று கூவும் திமுகவினருக்கு 1999-ல் 2001-ல் அவர்களுடன் கூட்டணி வைத்தபோது தெரியாதா? என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் தான் பங்கேற்றதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். பேரூர் அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தான் கலந்து கொண்டதாகவும் அந்த விழாவிற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஆனால் இதனை திரித்து திமுகவினர் பொய் பரப்பி வருவதாகவும் எஸ்.பி.வேலுமணி காட்டத்துடன் கூறினார்.
மேலும் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்து வீடியோ வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என்ற அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டதாக கூறினார்.
அம்மாநாட்டில் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி ஒளிபரப்பப்பட்டதாக சொல்லப்படும் காணொளி குறித்து அவர்களுக்கு தெரியாது என்று அவர் விளக்கம் அளித்தார். 1999-ல் பாஜக கூட்டணியில் இருந்து மத்திய அமைச்சர்களாக இருந்த போதும், 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த போதெல்லாம் திமுக-வுக்கு தெரியாதா? அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனம் காரணமாக, மிகத் துணிச்சலான முடிவை எடுத்த தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பது எல்லோருக்கும் தெரியும் என்று அவர் நினைவுகூர்ந்தார்.
எங்களுடைய தலைவர்களை, முன்னோர்களைப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அதிமுகவின் கொள்கைகளை இபிஎஸ் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.