2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும், கூட்டணி ஆட்சி என்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். திமுக அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் மதிமுக விமர்சனத்தை முன் வைத்ததில்லை வைக்கவும் மாட்டோம். என்னுடைய 61 வருட பொது வாழ்வில் 30 ஆண்டுகள் திமுக, 31 ஆண்டுகள் மதிமுக என வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். கொள்கையில் உறுதியாக இருப்பவன் நான்.
திமுகவுக்கு பக்க பலமாக இருப்பேன் இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் பா.ஜக கட்சியுடன் இருந்து கொண்டு தமிழகத்தில் திராவிட கட்சியை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள், இமயமலை கூட அசைத்து விடலாம் திராவிட இயக்கத்தை தமிழகத்திலிருந்து யாரும் அசைக்க முடியாது.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு, கூட்டணி ஆட்சி சரியாக வருமா என்று கேட்டால் தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.