பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச. 01) தொடங்குகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச. 01) தொடங்கி வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜூன் ராம்மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கவுரவ் கோகோய், திமுக எம்பி டி.ஆர்.பாலு, திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 36 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் உள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டுமென்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று விவாதம் நடத்தப்படுவது குறித்து மத்திய அரசு தரப்பில் எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், நாடாளுமன்ற விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக கிளம்பி இருந்தநிலையில், குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்று, நடைபெற உள்ள முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
