காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியதை கண்டித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான உரிமையை மழுங்கடிக்க முயற்சிப்பதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. ஆட்சி மாறினாலும் இந்தப் போக்கு மாறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பூமி பூஜை செய்யும் அளவுக்கு தைரியம் எப்படி வருகிறது என்பதை அவர் கேள்வி எழுப்பி உள்ள அவர், இவ்விஷயத்தில் தமிழக அரசு மவுனம் சாதிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

“தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசு காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொய்க்கால் குதிரை அரசு என்பதால் தான் கர்நாடக காங்கிரஸ் இவ்வளவு துணிச்சலுடன் பேசுகிறதா?” என்றும் கேள்வி எழுப்பி உள்ள அவர்,  காவிரி நதி தமிழ்நாட்டின் ஜீவாதாரம் எனவும்,  “டெல்டா மாவட்டங்கள் உள்பட 20 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரம் காவிரி. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும். இதனை அனுமதிக்க அதிமுக ஒருபோதும் தயாராக இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வரின் பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அவர்,  “இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்”என்றும் எடப்பாடி பழனிசாமி  வலியுறுத்தி உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version