தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை அனைத்து தேர்தல்களிலும், தனித்து களம் கண்டு வரும் சீமான், மாடுகள், மரங்கள், கடல்களிடையே கூட மாநாடு நடத்தி வருகிறார். அதேசமயம், பாமக, தேமுதிக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை எந்த பக்கம் இழுப்பது என்று பிரதான கட்சிகள் போட்டிபோட்டு வருகின்றன.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இதற்கிடையில், கரூர் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போது, 41 பேர் பலியானதால், விஜய்யின் சுற்றுப்பயணம் தற்காலிமாக நிறுத்தப்பட்டதோடு, தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், விஜய் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா அல்லது தனித்து களம் காண்பாரா என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை சிலர் ஏந்தி நின்றனர். அப்போது 2026க்கான தேர்தல் கூட்டணி குறித்து பேசிய பழனிசாமி தவெக கொடியை பார்த்து, “அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. இதோ பாருங்கள், கொடி பறக்கிறது -பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்” என்று பேசினார்.
இந்தப் பேச்சு, தவெக உடனான சாத்தியமான கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், எப்போதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் தவெக தரப்பு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில், பொதுமக்கள் யாரேனும் கொடியை பிடித்திருப்பார்கள்; எங்கள் கட்சித் தொண்டர்கள் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.