கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை விஜய் வரும் 13ஆம் தேதி நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும், நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை (அக்-08) அன்று தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அறிவழகன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில், விஜய் வருகின்ற 13ஆம் தேதி, கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூருக்கு நேரடியாக சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை ஒரே அரங்கத்தில் வரவழைத்து அவர்களிடம், வருத்தத்தை தெரிவித்து இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கு விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க உள்ளதாகவும், அரங்கத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சிக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இடத்தை தேர்வு செய்த பிறகு அதற்கான அனுமதியை கரூர் போலீசார் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version