கரூர் விவகாரத்தில் விஜய் ஒரு கட்சி தலைவர், அவரை ஏன் முதலமைச்சருடன் ஒப்பிடுகிறீர்கள் என மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் விஜய் பங்கேற்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் 110 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டனர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தவெக நடத்திய வாதத்தில், அரசியல் காரணங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். கூட்டத்தில் சட்டவிரோதிகள் புகுந்துள்ளனர். கட்சிக்காரர்களை நாங்கள் தடுத்திருக்கலாம், மக்களை போலீஸ் தான் தடுத்திருக்க வேண்டும் என வாதிட்டனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதி, விஜய் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் எப்படி கூறினீர்கள்? சம்பள நாள், வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாள் என்பதால் குறைவான மக்கள் வருவார்கள் என எப்படி கணித்தீர்கள்? உங்கள் கட்சி தலைவரை முதலமைச்சர் அல்லது மற்ற தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். விஜய் நடிகர். அவரை பார்க்க பெண்கள், குழந்தைகள் வருவார்கள். நீங்கள் கேட்ட 3 இடமே பொருத்தமற்றது. அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு தெரியுமா, அவரிடம் சொல்லப்பட்டதா? என சரமாறி கேள்விகளை எழுப்பினார்.