பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச ஏசியன் லெ மான்ஸ் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் ரேஸிங் அணி 13வது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தயத்திலும் பங்கேற்று, தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வருகிறார். ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் சொந்தமான பந்தய அணியையும் தொடங்கி, சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
இந்த அணி, துபால், ஸ்பெயின், இத்தாலி, அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று அஜித் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில், பிரான்ஸில் நடைபெற்ற புகழ்பெற்ற ஏசியன் லெ மான்ஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி பங்கேற்றுள்ளது. இந்தப் கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற பெருமையை ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பெற்றுள்ளது.
கடும் சவால்கள் நிறைந்த இந்த ரேஸில், மொத்தம் 62 கார்கள் களமிறங்கின. இதில் அஜித்குமாரின் அணி 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட தனது அணியின் செயல்பாடு குறித்து, ‘அஜித்குமார் ரேஸிங்’ தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளது. பந்தயத்தில் இருந்த நெரிசலான சூழலையும் கடந்து, இரண்டு கார்களும் எந்தவித விபத்துகளும் இன்றி சிறப்பாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. முதல்முறையாகக் களமிறங்கிய அனுபவத்திலேயே இந்த இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பான தொடக்கம் என்றும், வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முன்னேற்றத்தை எட்டுவோம் என்றும் அஜித்குமார் ரேசிங் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
