வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 318 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 58ஆக இருந்தபோது, கே.எல்.ராகுல் 38 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷனுடன் இணைந்து ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தனர். இதனை யடுத்து, 145 பந்துகளில் ஏழாவது சதத்தை கடந்த ஜெய்ஸ்வால், 224 பந்துகளில் (19 பவுண்டரிகள்) 150 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் குறைந்த வயதில் அதிக சதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர்களில் கிரீம் ஸ்மித் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார். இருவரும் 24 வயதிற்குள் 7 சதங்களை அடித்துள்ளனர். மேலும், அவர் அடித்த 7 சதங்களில் 5 சதங்கள் 150 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டதாகும். அதேபோல், குறைந்த வயதில் 150 ரன்கள் அல்லது அதற்கு மேல் விளாசியவர்களில் டான் பிராட்மேனுடன் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

இதற்கிடையில், சாய் சுதர்ஷன் 87 ரன்களில் வெளியேறினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், சுப்மன் கில் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version