ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் எதிகதற்ப எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல், அதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் என இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளில் கூட பாகிஸ்தான் அணியுடன் இந்திய வீரர்கள் போட்டியிட மாட்டார்கள் என கூறப்பட்டது.
இந்த சூழலில் தற்போது நடந்து வரும் ஆசிய கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு துபாய் மைதானத்தில் இரு அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக இரு அணிகளும் மோதும் போட்டியில் இந்தியாவின் பேட்டர்களுக்கும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை இரு அணிகளின் ஸ்பின்னர்களுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
இந்தியாவின் சார்பில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி பாகிஸ்தானுக்கு சவாலான வீரர்களாக உள்ளனர் என கூறப்படுகிறது. பாகிஸ்தானில் சூஃபியான் முகீம், அப்ரார் அகமது இந்தியாவுக்கு எதிராக பலம் சேர்க்க கூடியவர்களாக உள்ளனர். இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு குரல்களும், ஆதரவும் வலுத்து வரும் நிலையில் பாய்காட் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.