தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்திய அணியைப் பொறுத்தவரையில், சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் ஆகியோர் தொடர்ந்து மோசமாகவே விளையாடி வருகின்றனர்.

இருவரும் தங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து விமர்சனத்துக்கு விடைகொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். பந்துவீச்சும் பெரியளவு சோபிக்காத நிலையில், அதிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தர்மசாலா மைதானத்தில் இதுவரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற இருக்கும் ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், “அணியில் இரண்டு மாற்றங்கள். அக்சர் படேல் மற்றும் பும்ரா அணியில் இல்லை. அக்சர் படேல் உடல்நலக்குறைவு காரணமாகவும், ஜஸ்பிரித் பும்ரா தனது தனிப்பட்ட காரணங்களாலும் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்பதாலும் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

சமீபத்தில் மூன்று வடிவங்களிலும் 100 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்ற பும்ரா திடீரென மூன்றாவது போட்டியில் விளையாடாதது ஏன் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார், எனவே அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். மீதமுள்ள போட்டிகளுக்காக அவர் அணியில் இணைவது குறித்த தகவல் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version