காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ஜண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று, நாட்டின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இப்போட்டியில், பி பிரிவில் களமிறங்கிய ஜண்டு குமார், தனது முதல் முயற்சியில் 181 கிலோ எடையையும், இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையையும் வெற்றிகரமாகத் தூக்கினார். இறுதியில் 130.9 புள்ளிகளைப் பெற்ற அவர், மேத்யூ ஹார்டிங் மற்றும் வெற்றி பெற்ற லில்வான் இட்ரிஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் ஹர்நௌத் பகுதியில் எளிய குடும்பத்தில் பிறந்த ஜண்டு குமார், சிறுவயது முதலே போலியோ பாதிப்பால் அவதிப்பட்டார். இவரது தந்தை ஒரு காய்கறி வியாபாரி ஆவார். கடும் வறுமை மற்றும் உடல் ரீடியான சவால்களைக் கடந்து, தனது உறுதியினாலும் கடின உழைப்பினாலும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு பாரா தடகள வீரராக தனது விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கிய இவர், F55 பிரிவு குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று பல மாவட்ட மற்றும் மாநில அளவிலான பதக்கங்களை வென்றுள்ளார். அந்த நாட்களில் ஜிம்மில் செய்த பயிற்சி இவருக்கு பவர்லிஃபீட்டிங் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.
மாநில போட்டி ஒன்றில் கிடைத்த பரிந்துரையின் பேரில் பாரா பவர்லிஃப்டிங் துறைக்கு மாறிய ஜண்டு குமார், தனது முதல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும், அந்தத் தோல்வியே அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பாராலிம்பிக் வெண்கலப் பதக்க வென்ற ராஜீந்தர் சிங் ரஹேலு இவரது திறமையை அடையாளம் கண்டு, காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) தேசிய மையத்தில் பயிற்சி பெற அழைப்பு விடுத்தார்.
ராஜீந்தர் சிங் ரஹேலுவின் வழிகாட்டுதலின் கீழ் வேகமாக முன்னேறிய ஜண்டு குமார், இந்தியாவின் முன்னணி பாரா பவர்லிஃப்ட்டர்களில் ஒருவரானார். 2025 ஆம் ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 205 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையைப் படைத்த அவர், கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் அதனை 206 கிலோவாக மேம்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, பெய்ஜிங் உலகக் கோப்பை 2025 மற்றும் ஆசிய & ஓசியானியா சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
Lawn Bowls: இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் புதுல் சோனோவால், ஃபாக்லாந்து தீவுகளின் செசில் அலெக்ஸாண்டரை வீழ்த்தினார். பெண்களுக்கான இரட்டையர் பிரிவு பி பிரிவில் ரூபா ராணி திர்கி மற்றும் பிங்கி சிங் ஜோடி தென்னாப்பிரிக்க அணியை 2-0 (6-4, 7-5) என்ற கணக்கில் வீழ்த்தியது.
குத்துச்சண்டை (Boxing): ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜாதுமணி சிங் உள்ளூர் வீரர் ஆரோன் குல்லனை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பாரா நீச்சல் (Para Swimming): ஆண்களுக்கான 100 மீட்டர் ப்ரீஸ்டைல் S13 இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ரவி வீரா வெங்கடா பவானி கார்த்திக் புதிகினா மற்றும் அலி இமாம் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்தனர்.
நீச்சல் (Swimming): ஸ்ரீஹரி நடராஜ் ஆண்களுக்கான 50 மீட்டர் பேக்ட்ரோக் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற போதிலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் 7வது இடத்துடன் வெளியேறினார்.
பாரா பவர்லிஃப்டிங் (இதர பிரிவுகள்): ஆண்களுக்கான லைட்வெயிட் இறுதிப் போட்டியில் அசோக் மற்றும் பர்ஜீத் குமார் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்தனர். பெண்களுக்கான லைட்வெயிட் பிரிவில் ஜஸ்பிரீத் கவுர் மற்றும் சுமன் தேவி முறையே 6 மற்றும் 7வது இடங்களைப் பிடித்தனர். ஹெவிவெயிட் பிரிவில் கஸ்தூரி ராஜாமணி வெற்றிகரமாக எடையைத் தூக்கத் தவறி கடைசி இடத்தைப் பிடித்தார். சுதிர் 6வது இடத்தைப் பிடித்தார்.
