சென்னை தியாகராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் தமிழக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து 5வது நாளாக நீட் தேர்வு ரத்து மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேடையில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன்,

இளைஞர்களின் எழுச்சியும் ஒற்றுமையும் தங்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைகின்றன என்றும், எந்தவொரு போராட்டமும் மாணவர்களின் கைகளில் எடுக்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான வெற்றியைப் பெறும் என்றும் குறிப்பிட்டார். மேலும், உங்களது இந்த நியாயமான போராட்டத்திற்கு நாங்களும் முழு பலமாக உங்களோடு நிற்போம் என்றும், நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்குத் துணை நிற்பதே எங்கள் வேலை என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த மாணவர்கள் போராட்டத்தை வேறு யாரும் தங்கள் சுயநலத்திற்காகத் தனதாக்கிக் கொள்ள அனுமதிக்காதீர்கள் என்றும், மாணவர்களின் போராட்டம் எப்போதும் மாணவர்கள் போராட்டமாகவே தனித்து ஒளிர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உரிமைகளுக்காகப் போராடுவது நம் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்றும், போராடக் கூடாது என்பவர்கள் மாணவர்களை அரசியலில் ஈடுபடவோ அல்லது கல்வி கற்கவோ தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்துபவர்களைப் போன்றவர்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இறுதியாக, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் வரை இந்த அறப்போராட்டம் தொடர வேண்டும் என்றும், உங்களிடம் காணப்படும் இந்த ஒற்றுமை எப்போதும் குறையாமல் தொடர வேண்டும் என்றும் வெற்றிமாறன் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version