ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

நடப்பு சீசனில் மும்பைக்கு எதிராக நடைபெற்ற இரண்டு லீக் ஆட்டங்களிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் மற்றும் ஒரே அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. இதுவரை இரு அணிகளும் 41 முறை நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், மும்பை 21 முறையும், சென்னை 20 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே பல முக்கிய புள்ளிவிவரங்களை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணிக்கு எதிரான போட்டிகளில் சிஎஸ்கே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. 2020-ம் ஆண்டு முதல் இதுவரை இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 13 போட்டிகளில், சிஎஸ்கே 9 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. மேலும், 2014 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே சீசனில் மும்பை அணியை இரண்டு முறை லீக் சுற்றில் வீழ்த்துவது சிஎஸ்கே-வுக்கு இது மூன்றாவது முறையாகும்.

நேற்று நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே பதிவு செய்த மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது. 160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரின் சிறப்பான அரைசதங்களின் உதவியுடன் 11 பந்துகள் மீதமிருக்கையிலேயே வெற்றியை எட்டியது. பந்துவீச்சில் அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றி சிஎஸ்கே ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version