ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரில் இன்று இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது.

போட்டி சுருக்கம் :
இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 136 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பின்னர் விளையாடி இங்கிலாந்து அணி அதனுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 241 ரன்கள் மட்டும் தான் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மைக்கேல் நேசர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள், முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 77 ரன்கள், பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் ( முக்கியமாக ஜோ ரூட் ) விக்கெட் என போட்டி முழுவதும் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்த மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார். மிட்செல் ஸ்டார்க் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது தனிச்சிறப்பு.
வருட கணக்கில் தோல்வி அடைந்து வரும் இங்கிலாந்து அணி :

தற்பொழுது கதை என்னவென்றால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 14 வருடம் 11 மாதம் ஆகியும் இதுவரை ஆஸ்திரேலிய அணியை ஒருமுறை கூட இங்கிலாந்து அணியால் வீழ்த்த முடியவில்லை. மொத்தமாக இன்று நடந்து முடிந்த போட்டியை சேர்த்து 17 போட்டிகளில் 15 தோல்வி மற்றும் 2 டிரா என இங்கிலாந்து அணி வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த நடப்பு டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் மீண்டும் வர முடியும். அதையும் கடந்து வெற்றி பெற வேண்டும் என்றால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையை பார்க்கையில் மேற்கூறிய இரண்டும் நடப்பது மிகவும் கடினம். இங்கிலாந்து அணி மீண்டும் வந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்த இரண்டில் எது நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
