சினிமாவிலும் அரசியலிலும் கன்னடமா தமிழா என்று சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விளையாட்டில் பெங்களூருவின் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடுகிறது. 18 ஆண்டு கால வனவாசத்திற்குப் பின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் கோப்பையின் மூடி சூடியிருக்கிறது.
ஐபிஎல்-ன் பேன்சி அணிகள்
ஐபிஎல் விளையாட்டைப் பொறுத்தளவில், மாநிலத்திற்கு ஒரு அணி இருந்தாலும் ரசிகர் படையால் கொண்டாடப்படும் பேன்சி அணிகள் ஐந்துதான். தோனிக்காக சென்னை, கோலிக்காக பெங்களூரு, சச்சினுக்காக மும்பை, ஷாருக் கானுக்காக கொல்கத்தா, கடைசியாக காவியா மாறனுக்காக ஐதராபாத் என ஐந்து அணிகளின் மீதே அனைத்து கவனமும். இதில், 5 முறை சென்னை, 5 முறை மும்பை, 3 முறை கொல்கத்தா, ஒரு முறை ஐதரபாத் என இவற்றைச் சுற்றியே கோப்பையும் சுழன்று கொண்டிருந்தது. இதில் 17 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்தது பெங்களூரு மட்டுமே.
ஆர்சிபி கடந்து வந்த பாதை
2008-ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வரும் ஆர்சிபி, 2009,11 மற்றும் 16-ல் இறுதிப்போட்டி வரை வந்தது. 18 சீசன்களில் 10 முறை பிளே ஆஃப்-க்கு தகுதி பெற்றது. 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கில் 2-ம் இடம் பெற்றது. 2021-ம் ஆண்டு 3-வது இடம் வரை வந்தது. அப்போது சீசன் தொடக்கத்திலிருந்தே ஆர்சிபி வெளிப்படுத்திய திறமையைப் பார்த்து அந்த ஆண்டு நிச்சயம் கப் அடிக்கும் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், கொரோனா காரணமாக மைதானம் மாற்றப்பட்டதால் பின்னடைவு கண்டது. ஆனாலும் தொடர்ந்து ஆர்சிபி மீண்டும் மீண்டும் நம்பிக்கையோடு முயன்று வந்தது.
தோல்வியிலும் தொடரும் ரசிகர்கள்
ஆர்சிபி தொடர்ந்து போராடி வந்த பாதையில், அதற்கு வாய்த்த ரசிகர்கள் வினோத நம்பியுடன் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆர்சிபி வென்றாலும் தோற்றாலும் ஒரே மாதிரியான குதூகலத்துடன் தொடர்ந்து வந்தனர். அணியையும், அதன் ரசிகர்களையும் சமூக வலைதளங்களில் தோல்வியாலேயே அடையாளம் காட்டிக் கிண்டலடிக்கப்பட்டாலும், “ஈ சாலா கப் நமதே” என்ற வாசத்தை ஒவ்வொரு சீசன் தொடக்கத்திலும் சொல்லாமல் விட்டதில்லை. பொறுமை, நம்பிக்கையின் அடையாளங்களாக ஆர்சிபி ரசிகர்களும், விடாமுயற்சியின் உருவமாக அணியும் பார்க்கப்பட்டது. அதை மாற்றி அமைக்கும்படிதான் இவ்வாண்டு ரசிகர்களுக்கு இன்பப் பரிசை வழங்கியிருக்கிறது ஆர்சிபி அணி.
18 ஆண்டு தவத்தின் பலன்
நமது புராணங்களில் கடவுளை நோக்கிப் பலகாலம் தவமிருந்து வரத்தைப் பெறுவது காட்டப்படும். ஆர்சிபியும் அப்படி 18 ஆண்டுகள் விடாமுயற்சியுடன் தவமிருந்து கோப்பை என்ற வரத்தைப் பெற்றிருக்கிறது. நீண்ட காலமாக ஆர்சிபி ரசிகராக இருப்பவர்கள் காத்திருந்து கிடைத்த வெற்றியைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு குர்னல் பாண்டியா, புவனேஷ்வர் ஆகியோரின் பந்துவீச்சு, பில்சால்ட் பிடித்த கேட்ச், ஜித்தேஷ் ஷர்மாவின் விளாசல் எனப் பல காரணங்கள் உண்டு. இந்தக் கூட்டு முயற்சியின் பலனாகவே அணி தன் ரசிகளுக்கு அற்புத வெற்றியைப் பரிசாகக் கொடுத்திருக்கிறது.
அழுத குழந்தை கோலி
ஆட்டத்தின் இறுதி ஓவர் தொடக்கத்திலேயே கோலி அழத் தொடங்கிவிட்டார். 6 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. ஹேசல்வுட்டின் திறமையான பந்துவீச்சு தன் அணிக்கு வெற்றியை ஈட்டும் என்ற ஆனந்தக் கண்ணீரை ரசிகர்களுக்கும் வர வைத்தார் கோலி. ஆட்டம் முடிவில் அழுகையும் குதூகலமுமாய் ஓடிச் சென்ற கோலியை அதுவரை அப்படியொரு உற்சாகத்துடன் யாரும் பார்த்ததில்லை என்று நெகிழ்ச்சியோடு கூறி வருகின்றனர் ரசிகர்கள். கோலியின் வழக்கமான 18-ம் நம்பர் ஜெர்சி அவருக்கு அதிர்ஷட்டமாகச் செயல்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி, அதில் 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்து, இறுதிப்போட்டிவரை வந்து தன் அணியையும் ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டோமே என்ற உணர்வில் இருந்த கோலிக்குப் பொங்கிய உற்சாகத்தை வெளிப்படுத்தினார் கோலி.
மாநிலங்களுக்கு இடையே பல்வேறு அரசியல்கள் நிலவி வரும் இன்றைய சூழலில், பெங்களூரு அணியின் வெற்றியைப் பாரபட்சமின்றி அனைத்து அணிகளின் ரசிகர்களும் உற்சாகமாகப் பார்ப்பதே, பேதங்களைக் கடக்கும் வெற்றியை பெங்களூரு சுவைத்திருப்பது உறுதியாகிறது.
– விவேக்பாரதி