பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கு….
இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

விருதுநகர் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலின் திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த முத்துச்சாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். விருதுநகர் தேவதானம் பகுதியில் உள்ள , “ஸ்ரீ அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இப்பகுதியில் சுமார் 1300 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படியில் சுவாமிக்கு மரியாதை செலுத்தப்படும். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும், மண்டகப்படி அமைத்து சுவாமிக்கு மரியாதை செய்யும் நிலையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் மண்டகப்படி வழங்கப்படுவதில்லை.

இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது ஆகவே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் மண்டகப்படி வழங்கி 10 நாட்களில் ஒரு நாளை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கென ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியக்கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர்
“ஏற்கனவே நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மனுதாரரும் பங்கேற்றுள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையின் இணை ஆணையரே இறுதி முடிவு எடுக்க முடியும்” என குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ஆகவே அடுத்த ஆண்டு மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்பட வேண்டும்” என குறிப்பிட்டு,
வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version