அமெரிக்காவுடனான போர் பதற்றம் மற்றும் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இருந்து ஈரான் விலகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் சூழ்ந்துள்ளன.
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. ஈரான் அணி தனது பிரிவில் உள்ள போட்டிகளை அமெரிக்க மண்ணிலேயே விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஈரான் அணி தொடர்ந்து நான்காவது முறையாக FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது, மேலும் அதன் அனைத்து குழு நிலை போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறும்.
அந்த அணி ஜூன் 15 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடும். இதைத் தொடர்ந்து ஜூன் 21 ஆம் தேதி பெல்ஜியத்திற்கும், ஜூன் 26 ஆம் தேதி சியாட்டிலுக்கும் எதிரான போட்டிகள் நடைபெறும். தற்போதைய சூழலில், தங்கள் நாட்டுத் தலைவரைக் கொன்ற அமெரிக்காவிற்குச் சென்று விளையாடுவது சாத்தியமற்றது என ஈரான் கருதுகிறது.
இந்தநிலையில், ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ் (Mehdi Taj), தற்போதைய பதற்றமான சூழலில் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார். “அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பிறகு, நாங்கள் அங்கு சென்று விளையாடுவதை எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, அந்நாட்டின் முக்கிய கால்பந்து தொடரான ‘பாரசீக வளைகுடா புரோ லீக்’ (Persian Gulf Pro League) போட்டிகள் காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரான் ஒருவேளை அதிகாரப்பூர்வமாகப் போட்டிகளில் இருந்து விலகினால், ஆசியப் பிரிவில் இருந்து ஈராக் அல்லது ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஃபிபா இதுகுறித்து இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
