இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கிற்கு,  உத்தரப் பிரதேச மாநில அரசு அரசு வேலை வழங்கி கௌரவித்துள்ளன.

இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு ரிங்கு சிங் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, உத்தரப் பிரதேச அரசு அவரை ‘மண்டல விளையாட்டு அதிகாரி’ (Regional Sports Officer) என்ற உயரிய பதவிக்கு நியமித்துள்ளது. விளையாட்டுத் துறையில் அவர் செய்த சாதனைகளையும், கடின உழைப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிங்கு சிங்கின் இந்த வெற்றிப் பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த முக்கியமான காலகட்டத்தில், அவரது தந்தையின் புற்றுநோய் பாதிப்பு மிகவும் தீவிரமடைந்தது. ஒருபுறம் குடும்பத்தின் இக்கட்டான சூழல், மறுபுறம் நாட்டுக்காக விளையாட வேண்டிய கடமை என இரண்டுக்கும் இடையே சிக்கிய ரிங்கு சிங், மன உறுதியுடன் செயல்பட்டார். தனது தந்தையின் சிகிச்சையைத் துரிதப்படுத்திக் கவனித்துக் கொண்ட அதே வேளையில், மைதானத்தில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்குத் தூணாக நின்றார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அரசுப் பதவி, ரிங்கு சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்குக் கிடைத்த கூடுதல் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண பின்னணியில் இருந்து வந்து, இன்று உலகத் தரம் வாய்ந்த வீரராக உயர்ந்துள்ள ரிங்கு சிங்கிற்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். தந்தையின் உடல்நலக் குறைவு போன்ற தனிப்பட்ட துயரங்களுக்கு மத்தியிலும், தேசத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகவே இந்த அரசுப் பணி நியமனம் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version