தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்து வரும் நிலையில், புதுச்சேரியில், விசிக தனித்துப்போட்டியிடும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்றும், அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில், விசிக-வுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படாதது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், புதுச்சேரி தேர்தலில் விசிக தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று முக்கியத் தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இந்த முரண்பாடு, புதுச்சேரி தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகளை விசிக பிரிக்கும் பட்சத்தில், அது ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குச் சாதகமாக அமையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
