ஐபிஎல் 18-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய 10 அணிகள் இந்த முறை களமிறங்கின. நாட்டின் 13 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தன.
இதுவரை நடந்து முடிந்த தொடர்களில் மும்பை, சென்னை ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தின. இந்தமுறை எப்படியும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பெங்களுர், குஜராத், டெல்லி ஆகிய அணிகள் களத்தில் தங்கள் பலத்தை நிரூபித்து வந்தன. அதற்கு ஏற்றார்போல் புள்ளிப்பட்டியலில் இந்த மூன்று அணிகள் தான் முதலிடத்தில் இருந்தன.
ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் 22-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பெஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலாத் தலத்தில் தீவிரவாதிகள் நான்கு பேர் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர். நிராயுதபாணிகளாக இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் இச்சம்பம் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து கடந்த 7-ந் தேதி நள்ளிரவு இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய தீவிரவாதிகள் பலரும் அவர்களது உறவினர்களும் கொல்லப்பட்டனர். நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.
பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மட்டுமே இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் இதற்கு பதிலடியாக இந்திய எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இருதரப்பிலும் கடந்த 2 நாட்களாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல் எழுந்தது. இதுபற்றி மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், ஐபிஎல் நிர்வாகத்தினரும் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தி வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது சோகத்தைத் தரும் முடிவாக இருக்கலாம். ஆனால் இருநாட்டு எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதும், அதனை கண்டுகளிப்பதும் சரியாக வராது என்பதே உண்மை.
🚨 News 🚨
The remainder of ongoing #TATAIPL 2025 suspended with immediate effect for one week.
— IndianPremierLeague (@IPL) May 9, 2025