தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, ஐபிஎல் 2026 தொடருக்கான அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், தேர்தல் தேதிகளுக்கு ஏற்ப போட்டிகளைச் சீரமைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரங்களில் மாநில காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் மும்முரமாக இருப்பதால், சென்னை (சேப்பாக்கம்) மற்றும் கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்) போன்ற மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால், தேர்தல் நடைபெறும் தேதிகளில் அந்த மாநிலங்களில் போட்டிகள் நடத்தப்படுவதைத் தவிர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 20 முதல் 25 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்த பிறகு, மார்ச் மாதத்தின் பாதியில் மீதமுள்ள போட்டிகளுக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்படும். முன்னதாக தேர்தல் இல்லாத மாநிலங்களில் போட்டிகள் நடத்தப்படும்.

வழக்கமாக கொல்கத்தாவில் சிக்கல் ஏற்படும்போது போட்டிகள் அசாமின் குவஹாத்திக்கு மாற்றப்படும். ஆனால், இந்த முறை அசாமிலும் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிசிசிஐ-க்கு கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. மேலும், டி20 உலகக்கோப்பை 2026 முடிந்த சில நாட்களிலேயே ஐபிஎல் தொடங்குவதால், மைதானங்களைத் தயார்படுத்துவதிலும் கால அவகாசம் குறைவாகவே உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version