கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அதன் ஏற்பாட்டு குழுவின் மேலாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனும், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாகவும் அறியப்படும் லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தி கோட் டூர்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார்.
அந்த வகையில், இன்று கொல்கத்தாவுக்கு வந்த மெஸ்ஸிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள லேக் டவுன் பகுதியில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை, காணொளி வாயிலாக லியோனல் மெஸ்ஸி திறந்து வைத்தார். பின்னர், சால்ட்லேக் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் லியோனல் மெஸ்ஸி பங்கேற்றார்.
மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். அதேசமயம் மெஸ்ஸியும் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், மைதானத்தை விட்டு வெளியேறினார்.
மெஸ்ஸி வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுதொடர்பான காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் மேலாளர் சதத்ரு தத்தாவை, கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கொல்கத்தா டிஜிபி ராஜிவ் குமார் உறுதி செய்துள்ளார். முன்னதாக, மைதானத்திற்கு வருகை தந்திருந்த ரசிகர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
