ஹரியானாவை சேர்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி வருகிறார். 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டியில் 87.58மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. அதனை தொடர்ந்து சர்வதேச விளையாட்டுத் திருவிழாவுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,700 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
ஈட்டி எறிதலில் பங்கேற்றிருந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரை, அவரும் தன்னுடைய மகன் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் கூறியிருந்தது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு பெங்களூருவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் தொடருக்காக அவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை அழைத்திருந்தார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விரருடன் நட்புடன் இருப்பதாக நீரஜ் சோப்ராவை நெட்டிசன்கள் விளாச தொடங்கினர். இது தொடர்பாக அவர் விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ஈட்டி எறிதலில் தனது சாதனையை அவரே முறியடித்து அசத்தியுள்ளார். தோஹா டயமண்ட் லீக் தொடரில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, புதிய சாதனை படைத்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஜூலியன் வெபர் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த விரர்களுடன் போட்டியிட்ட சோப்ரா, தனது மூன்றாவது எறிதலின் போது முதல் முறையாக 90 மீட்டரை தாண்டி முன்னிலை வகித்தார்.
இந்தத் தொடரில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இறுதியில் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை பெற்றார். நீரஜ் சோப்ரா 90.20மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பெற்றிருந்தாலும், அவரது செயல்திறன் விளையாட்டில் உலகளாவிய போட்டியாளராக அவரது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நீரஜ்ஜின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி உட்பட பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.