ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைக்கியா பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.

தொடக்கத்தில் ஷபாலி வர்மா (6), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர்.

அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்சில் 9 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் இடம் பெற்றன. ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 34 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் சீராக விளையாடினாலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணியில் முனீபா அலி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர், “விமானப் பயணத்தில் இருந்ததால் அணியின் சிறப்பான ஆட்டத்தை நேரலையில் பார்க்க முடியவில்லை. ஸ்மிருதியின் அரைசதம், தீப்தி சர்மாவின் 5 விக்கெட்டுகள் மட்டுமல்லாமல், ஸ்ரீ சரணி, ரிச்சா கோஷ் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இது முழுமையான அணிச் செயல்பாடாக அமைந்துள்ளது. உலகக் கோப்பை பயணத்துக்கு இந்தியா சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியாவும் இந்திய அணியை பாராட்டி, “மிகவும் ஒழுக்கமான மற்றும் துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி தொடரின் அடுத்த கட்ட ஆட்டங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version