இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து இளம் வீரர்கள் தங்களது திறமையை சிறப்பான ஆட்டத்தின் மூலம் நிரூபித்து வருகின்றனர். அதற்கேற்ப இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று (24.05.2025) அறிவித்தது. அதன்படி, இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேப் போல துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தொடரில் இந்திய அணியில் சுப்மன் கில், ரிஷப் பண்ட் உட்பட ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார், ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அணியில் சர்பராஸ் கான், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன்கில் தலைமையிலான இளம் வீரர்கள் எவ்வாறு டெஸ்ட் போட்டியை சமாளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது.
