இந்தியப் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. இருப்பினும், சில சாதனைகள் பல ஆண்டுகள் கடந்தும் யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளன.
கிறிஸ் கெயிலின் 175 ரன்கள் (அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்): ஐபிஎல்லில் மட்டுமல்ல, டி20 கிரிக்கெட்டிலும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பெற்ற சாதனையை கிறிஸ் கெய்ல் வைத்திருக்கிறார். 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் விளாசிய 175 ரன்கள் இன்றும் முதலிடத்தில் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஒரு தனிநபர் இவ்வளவு ரன்களை எடுப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
30 பந்துகளில் சதம்: ஐபிஎல் வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலேயே மிகவேகமாக அடிக்கப்பட்ட சதமாக கிறிஸ் கெய்லின் இந்த இன்னிங்ஸ் இன்றும் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் 23, 2013 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரர் கிறிஸ் கெய்ல் இந்த அசாத்திய சாதனையைப் படைத்தார். வெறும் 30 பந்துகளில் அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்து மைதானத்தை அதிர வைத்தார்.
அந்தப் போட்டியில் கெய்ல் ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 175* ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 இமாலய சிக்ஸர்கள் அடங்கும். மைதானத்தின் கூரையைத் தாண்டிச் சென்ற பந்துகள் இன்றும் ரசிகர்களின் கண்களுக்குள்ளேயே நிற்கின்றன.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்தும், உலகத்தரம் வாய்ந்த பல பேட்ஸ்மேன்கள் வந்த பிறகும், இந்த 30 பந்து சதம் என்ற இலக்கை யாராலும் நெருங்கக்கூட முடியவில்லை. டி20 கிரிக்கெட்டின் ‘யுனிவர்சல் பாஸ்’ தான் என்பதை இந்த ஒரே இன்னிங்ஸ் மூலம் உலகிற்கு நிரூபித்தார் கெய்ல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் 287/3 (அதிகபட்ச டீம் ஸ்கோர்): ஏப்ரல் 15, 2024 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-க்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து உலகையே அதிர வைத்தது. 11 ஆண்டுகளாக ஆர்சிபி வசம் இருந்த (263 ரன்கள்) சாதனையைத் தகர்த்து, ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது எஸ்.ஆர்.எச்.
விராட் கோலியின் 973 ரன்கள் (ஒரே சீசனில் அதிக ரன்கள்): 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விராட் கோலி காட்டிய விஸ்வரூபம் யாராலும் மறக்க முடியாது. அந்த ஒரே சீசனில் 4 சதங்களுடன் அவர் குவித்த 973 ரன்கள் என்பது ஒரு பேட்ஸ்மேனுக்குக் எட்டாக்கனியாகவே உள்ளது. 2023 ஆம் ஆண்டில், ஷுப்மான் கில் 890 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் ஜோஸ் பட்லர் 863 ரன்கள் எடுத்தார்.
அமித் மிஷ்ராவின் 3 ஹாட்ரிக் விக்கெட்டுகள்: ஐபிஎல் தொடரில் ஒரு முறை ஹாட்ரிக் எடுப்பதே கடினம். ஆனால், அமித் மிஷ்ரா மூன்று வெவ்வேறு சீசன்களில் (2008, 2011, 2013) ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை முறியடிக்க ஒரு பந்துவீச்சாளர் 4 முறை ஹாட்ரிக் எடுக்க வேண்டும், இது மிகவும் கடினம்.
அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் (எம்.எஸ். தோனி): ஐபிஎல் வரலாற்றில் ஒரு கேப்டனாக 150-க்கும் மேற்பட்ட வெற்றிகளைப் பெற்றுத் தந்த ஒரே வீரர் எம்.எஸ். தோனி மட்டுமே. நீண்ட காலம் ஒரு அணியை வழிநடத்தி இத்தனை வெற்றிகளைக் குவிப்பது தற்கால கிரிக்கெட் சூழலில் எந்த ஒரு கேப்டனுக்கும் சவாலான காரியம்.
இவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் ஷர்மா அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன்கள் பட்டியலில் உள்ளார்.
அல்சாரி ஜோசப்பின் அறிமுகப் பந்துவீச்சு: “வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், 2019-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில், அவர் 3.4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கு முன்பு, இந்தச் சாதனை சோஹைல் தன்வீர் வசம் (6/14) இருந்தது; அதனை அல்சாரி ஜோசப் முறியடித்தார்.”
கிளாசிக்’ பார்ட்னர்ஷிப்: கோலி – ஏபிடி படைத்த 229 ரன்கள் இமாலய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் பேட்டிங்கில் ஒரு மறக்க முடியாத காவியம் என்றால், அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இணைந்து அமைத்த அந்தப் பார்ட்னர்ஷிப் தான்.
மே 14, 2016 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. போட்டியின் போது கைகோர்த்த இந்த ஜோடி, எதிரணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்து 229 ரன்களை பார்ட்னர்ஷிப்பாகக் குவித்தது. இந்த போட்டியில், டிவில்லியர்ஸ் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 129 ரன்களையும், கோலி 55 பந்துகளில் 109 ரன்களையும் எடுத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் ஆர்சிபி அணிக்கு 248/3 என்ற மகத்தான ஸ்கோரைப் பெற்று 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.

