2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு அதிரடி சதத்தை அடித்துள்ளார். அவர் 55 பந்துகளில் சதத்தை எட்டினார், இது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிக வேகமான சதமாகும். முந்தைய போட்டிகளில் தனது மோசமான பேட்டிங்கிற்காக சூர்யவன்ஷி விமர்சிக்கப்பட்டார், ஆனால் இறுதிப் போட்டியில் அவர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார்.
இதேபோல், ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர்.
கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
சூர்யவன்ஷி ரெக்கார்டு: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இது மட்டுமல்லாமல், அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றிலேயே இரண்டாவது அதிவேக சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த உலகச் சாதனை இதுவரை ஆஸ்திரேலியாவின் வில் மலசுக் பெயரில் இருந்தது. ஆனால் தற்போது, இறுதிப் போட்டியில் அதிவேக சதம் என்ற புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றியுள்ளார்.
அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். அவருக்கு முன்பு உன்முக்த் சந்த் (2012) மற்றும் மன்ஜோத் கல்ரா (2018) மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இந்த போட்டியில் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளையும் குவித்தார். அண்டர்-19 உலகக் கோப்பை போட்டி ஒன்றில், ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையை அவர் உருவாக்கினார்.
இந்த இன்னிங்ஸில் அவர் 15 சிக்சர்கள் அடித்து, இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹில் வைத்திருந்த 12 சிக்சர்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
15 சிக்சர்கள், 15 பவுண்டரிகள்: இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். 218.75 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர், 15 ஃபோர்கள் மற்றும் 15 சிக்சர்கள் அடித்தார். இதில் 150 ரன்கள் முழுக்க பவுண்டரிகள் மூலமாகவே வந்தது.
இந்த அபார இன்னிங்ஸின் மூலம், நடப்பு அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை அவர் 7 இன்னிங்ஸ்களில் 439 ரன்கள் குவித்து, 62.71 என்ற சிறப்பான சராசரியுடன் விளையாடி வருகிறார். இதில் ஒரு சதமும், மூன்று அரைசதங்களும் அடங்குகின்றன.

