இந்திய தேர்வுக் குழுவை, இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் தந்தை சாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது.
311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தின் போது, களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 228 பந்துகளின் தனது 9-வது சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்ததற்கு வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டம் மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை ஆல் ரவுண்டராக வெளிப்படுத்தி வருகிறார் வாஷிங்டன் சுந்தர். இருப்பினும் அவருக்கு அணியில் நிலையான இடம் இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை, தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது,
“வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும், மக்கள் அவரது ஆட்டத்தை மறந்துவிடுகிறார்கள். மற்ற வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் என் மகனுக்கு மட்டுமே அவை கிடைப்பதில்லை. wa4-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சைபோல் 5-வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்புகளை வாஷிங்டன் தொடர்ச்சியாக பெற வேண்டும். ஆச்சரியப்படும் விதமாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் என் மகன் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய தேர்வாளர்கள் அவரது ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்.
என் மகன் 1-2 போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் கூட நீக்கப்படுகிறான். இது என்ன நியாயம்?. இங்கிலாந்துக்கு எதிராக 2021-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் வாஷிங்டன் ஆட்டமிழக்காமல் 85 ரன்களையும், அகமதாபாத்தில் 96* ரன்களையும் எடுத்தார். அந்த 2 இன்னிங்ஸ்களும் சதங்களில் முடிந்திருந்தாலும் கூட அவர் நீக்கப்பட்டிருப்பார். வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இதுபோன்ற அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா? இதற்கெல்லாம் பிறகு அவர் மிகவும் வலிமையானவராகிவிட்டார். அதன் விளைவைத்தான் மக்கள் இப்போது பார்க்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.