டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே, இந்திய அணி ஒரு வலுவான வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவை இழந்தது. இதனைத் தொடர்ந்து, ஜஸ்பிரித் பும்ரா உடல்நலக் குறைவு காரணமாக அணியில் இருந்து விலகினார். இந்த நிலையில், இந்திய அணிக்கு அதிர்ஷ்டமாக மொஹம்மது சிராஜ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அடுத்தடுத்து வீரர்களின் காயம் தொடர்பான தகவல்கள் மேலும் கவலைக்கிடமானதாக மாறியுள்ளன. சமீபத்திய தகவல்களின் படி, இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் நமீபியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால், டி20 உலகக்கோப்பை தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு கூடுதல் சவால்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணிக்காக சமீப காலமாக சிறந்த ஃபார்மில் விளங்கி வரும் அபிஷேக் சர்மா, தற்போது உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாளை (பிப் 12) நமீபியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தகவல்களின் படி, அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதுவரை முழுமையாக குணமடையாத நிலை உள்ளதாகவும் தெரிகிறது. இதனால், அடுத்த போட்டிக்கான இந்திய அணியின் திட்டங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நமீபியாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் அபிஷேக் சர்மா சரியான நேரத்தில் குணமடையவில்லை என்றால், அவருக்குப் பதிலாக மாற்று வீரரான சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க இந்தியா முடிவு செய்யலாம். சஞ்சு சாம்சன் சமீப காலமாக அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷனுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக பயிற்சியாளர் விளக்கம் அளித்தார். அபிஷேக் சர்மா குணமடைந்தால் இந்திய அணி முழு வலிமையுடன் நமீபியாவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version