FIDE உலக ரேபிட்&பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்குகிறது.
மின்னல் வேக காய் நகர்த்தலுக்கு பெயர்போன இப்போட்டியில் 8 முறை பிளிட்ஸ் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனானன் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் களமிறங்குகின்றனர்.
ஓபன் பிரிவில் பிளிட்ஸ் மற்றும் ரேபிட் ஆகிய இரண்டு வடிவங்களிலும் முதல் நிலை வீரராக கார்ல்சன் உள்ளார். இந்திய நட்சத்திர வீரர்களும் கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் இந்தப் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். நடப்பு உலக சாம்பியனான டி குகேஷ் தனது பழைய ஃபார்மை மீட்டெடுக்க முயற்சிப்பார். அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா போன்ற மற்ற இந்திய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலக்கு கொண்டுள்ளனர்.
ரேபிட் மற்றும் பிளிட்ஸ் (திறந்த பிரிவு) போட்டிகளில் இந்தியா சார்பில் 29 வீரர்களும், மகளிர் பிரிவில் மேலும் 13 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். கோனேரு ஹம்பி(Koneru Humpy ) தற்போது ரேபிட் உலக சாம்பியன் பட்டத்தை வைத்துள்ளார், அவருக்கு அவரது சக இந்திய வீராங்கனையான திவ்யா தேஷ்முக்கிடமிருந்து கடுமையான போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா (s Fabiano Caruana)மற்றும் வெஸ்லி சோ(Wesley So), ரஷ்ய கிராண்ட்மாஸ்டர் Ian Nepomniachtchi , உஸ்பெகிஸ்தான் நட்சத்திரம் நோடிர்பெக்அப்துசட்டோரோவ் (Nodirbek Abdusattorov) ஆகியோரும் களமிறங்க உள்ளனர்.
ஃபிடே உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 அட்டவணை: ஃபிடே உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் டிசம்பர் 26 இன்று தொடங்குகிறது. ரேபிட் சுற்றுகள் டிசம்பர் 28 அன்று முடிவடைகின்றன. பிளிட்ஸ் போட்டி டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இடம்: ஃபிடே உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2025, கத்தாரின் தோஹாவில் உள்ள கத்தார் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் நிகழ்வுகள் வளாகத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியின் ரேபிட் பிரிவு, பொதுப் பிரிவில் 13 சுற்றுகள் கொண்ட சுவிஸ் வடிவத்தில் நடைபெறும். மகளிர் பிரிவில் 11 சுற்றுகள் கொண்ட சுவிஸ் வடிவம் பின்பற்றப்படும்.
பிளிட்ஸ் பிரிவில், பொதுப் பிரிவுக்கு 19 சுவிஸ் சுற்றுகளும், மகளிர் பிரிவுக்கு 15 சுவிஸ் சுற்றுகளும் நடைபெறும். பின்னர், முதல் நான்கு இடங்களைப் பிடிப்பவர்கள் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார்கள்,
பரிசுத் தொகை: பட்டம் வெல்வோருக்கு ரூ.74 லட்சம் உட்பட மொத்தம் ரூ.10 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
