ஐபிஎல் என்றாலே CSK தான் என்ற காலம் உண்டு. தல தோனிக்கு பெரிய ரசிகர் பட்டளாமே தமிழ்நாட்டில் உண்டு. இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாகவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளங்கிவருகிறது.
தல தோனி தலைமையில், பல ஆண்டுகளாக பல ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே மஞ்சள் அணி வெற்றி வாகை சூடிக்கொண்டே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பின் தங்கிவிட்டது. ஆனாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையவே இல்லை.
இப்படியிருக்கும் சூழலில், ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் கடந்த சில ஐபிஎல் சீசன்கள் தொடங்குவதற்கு முன்னர் ‘தோனி விளையாடுவாரா?’ என்ற கேள்வியும் சேர்ந்து எழுவது உண்டு. இந்நிலையில், 44 வயதான தோனி வரும் ஐபிஎல் சீசனிலும் விளையாடுவது இப்போது உறுதியாகி உள்ளது.
அதேபோல், ஐபிஎல்லை தொடர்ந்து மகளிர் ப்ரீமியர் லீக்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அதுவும், இந்திய மகளிர் படை உலகக்கோப்பையை வென்ற பிறகு, மகளிர் ப்ரீமியருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி வருகிறது. தற்போது வரை 5 அணிகள் மட்டுமே விளையாடி வருகிறது.
இந்தநிலையில், புதிய அப்டேட்டாக, விரைவில் சிஎஸ்கே மகளிர் படை களமிறங்கும் என்று அந்த அணியின் சி இ ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மகளிர் அணியை வாங்குவதே தங்களது அடுத்த இலக்கு என கூறிய அவர், சிஎஸ்கே-வின் அடுத்த கட்ட நடவடிக்கை மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதாக இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
