விபத்துக்களை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்துக்களை தடுக்க போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விபத்துக்களில் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்கள் வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சாலை விபத்துக்கள் மூலம் அதிகமான உயிரிழப்புகளை நடப்பதை தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பயணிகள் ஏற்றக் கூடாது, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அவசர கால கதவுகள் மட்டுமின்றி, எளிதில் அகற்றக்கூடிய ஜன்னல்களும் இருக்க வேண்டும், பேருந்துகள் தீப்பிடிக்காத தன்மையுடனும், தீயணைப்பு கருவிகளுடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விமானம், ரயில்வே துறையில் இருப்பது போல், பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய தனி ஆணையத்தை அமைக்க உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன், தனபால் அமர்வு, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version