கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் ஒன்றியம், ஒட்டப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெனுகுண்டாபுரம் ஏரிக்கரை பகுதியில், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர்களின் கருத்துப்படி, இந்த கல்வெட்டுகள் சுமார் 1,134 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிகிறது. அக்காலத்தில் ‘தகடூர் நாட்டு’க்கு உட்பட்ட ‘மாதம்பதி’ எனும் கிராமம், ‘மாதமங்கலம்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அங்கு ராஜராஜ சோழன் ஆட்சி புரிந்ததாகவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ராஜராஜ சோழனின் பிரதிநிதியாக ‘வெள்ளான்’ என்பவரின் மகனான ‘ராஜேந்திர சோழன்’ அந்தப் பகுதியை நிர்வகித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. அப்பகுதியில் விளைநிலங்களில் புகுந்து ஆடு, மாடுகளைத் திருட வந்த சமூக விரோதிகளுடன் ராஜேந்திர சோழன் போர் புரிந்துள்ளார். அந்தப் போர்க்களத்தில் ஒரு சிப்பாயால் வெள்ளான் என்பவரின் மகனான ராஜேந்திர சோழன் என்ற பெயர் கொண்ட ஆட்சியாளர் வீழ்த்தப்பட்டார் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி உடன்கட்டை ஏறியது போன்ற காட்சிகள் கல்வெட்டில் நுணுக்கமாகப் பதிக்கப்பட்டுள்ளன. வீர மரணம் அடைந்தவரின் உடலைத் தேரில் எடுத்துச் செல்வது போன்ற உருவங்களும் இந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் அந்தப் பகுதியில் மேலும் நான்கு இடங்களில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பழங்கால வரலாற்றைப் பறைசாற்றும் இந்தக் கல்வெட்டுகளைப் பாதுகாத்து, உரிய தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
