கடலூர் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனத்தை மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வழக்கம் போல தொண்டமாநத்தம், சின்னகாட்டு சாகை ஆகிய கிராமங்களுக்கு சென்று குழந்தைகளை ஏற்றி சென்றுள்ளார். கடலூர் முதுநகர் பகுதியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு, காலை 7.30 மணியளவில் செம்மங்குப்பம் பகுதி அருகே வேன் வந்துள்ளது.

அப்போது அங்கு ரயில்வே கேட் திறந்து இருந்துள்ளது. எப்போதும் போல சங்கர் வேனை ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டப் போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில், பள்ளி வேன் மீது மோதி இழுத்து சென்றுள்ளது. இதில் வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில், 3 மாணவர்கள் பலியாகினர்.

இந்த கோர விபத்திற்கு கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் டிரைவர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரெயில்வே விசாரணைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி டிரைவர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரெயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து அறியவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version