கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து வதந்தி பரப்பியதாக தவெக, பாஜக நிர்வாகிகள் 3 பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த செய்திக் குறிப்பில், ‘கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.
இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என சென்னை காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சகாயம் (பாஜக), மாங்காடு சிவநேசன் (தவெக), ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் (தவெக) ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், மூன்று 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, கரூர் விபத்து குறித்து அவதூறு பரப்பியதாக சமூக வலைதள பிரமுகர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.