டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான உரியக் காவிரி நீரைத் தமிழகத்திற்கு உடனடியாகத் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் மிக வலுவாக வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நீர்வளத்துறை செயலாளர் மற்றும் தமிழகப் பிரதிநிதிகள், காவிரியிலிருந்து ஜூன் மாதப் பங்கீடான 9.19 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதப் பங்கீடான 31.24 டி.எம்.சி என மொத்தம் 40.43 டி.எம்.சி நீரைக் கர்நாடகா உடனடியாகத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரினர்.
தங்கள் மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்ற கர்நாடக அரசின் வழக்கமான வாதத்தைத் தமிழக அரசு இக்கூட்டத்தில் திட்டவட்டமாக நிராகரித்தது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான கோடைக் காலத்தில், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கர்நாடகா மிக அதிகப்படியான தண்ணீரைப் பயன்படுத்தியதே தற்போதைய நீர் பற்றாக்குறைக்குக் காரணம் என்று தமிழகப் பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினர்.
எனவே, முறைகேடாகத் தண்ணீரைப் பயன்படுத்திவிட்டு நீர் இருப்பு இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது என்றும், தமிழகத்திற்குச் சேர வேண்டிய 40.43 டி.எம்.சி நீரைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனே பெற்றுத் தர வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
