2026, ஜூன்  22 முதல்  அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் முதலமைச்சரின் ’தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலாவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமானதாக கருதப்படும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தமிழர் பாரம்பரியத்தில், “தாய்மாமன் சீர்” என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹755.83 கோடி நிதி ஒதுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், திட்டத்தை விரைவாக செயல்படுத்த தேவையான ஒப்பந்தப் புள்ளிகளை உடனடியாக கோருமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயனாளர்களாக தகுதி பெறுவார்கள். திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 2026, செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 22 ) முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாள். இதனையொட்டியே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version