சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மக்களின் ஆதரவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது. திமுக தயவால ஆட்சி நடக்கவில்லை. சி.பி.எம். சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தாங்களாகவே முடிவெடுத்துத்தான் தவெகவுக்கு ஆதரவளித்ததாகவும், திமுக அனுப்பி வைத்ததாக நீங்கள் எப்படிச் சொல்லலாம் எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தாங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆதரவளிப்பதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும். அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக தவெக இருப்பதால்தான் ஆதரவளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒருவேளை அப்படி நாங்கள் ஆதரவு அளிக்காமல் போனால் அன்றிருந்த சூழ்நிலையில் மே10ஆம் தேதி பதவி ஏற்பு என்பதே நடந்திருக்காது. அதற்கு மாறாக 10ஆம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் குடியரசு தலைவர் ஆட்சி என்பது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.
பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் நீண்ட நெடிய போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளோடு சேர்ந்து நடத்தி வருவதாகவும், அப்படி இருக்கும்போது மறைமுகமாக பிஜேபி ஆட்சி நடத்தக்கூடிய வகையில் இங்கே ஒரு குடியரசு தலைவர் ஆட்சி என்பதை எங்களால் ஏற்க முடியாது. ஆகவே அதை தடுப்பது என்கிற நோக்கத்தோடு தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டை மேற்கொண்டதாகவும் கூறினார்.,
மதச்சார்பின்மை, சமநீதி, சமூக நீதி இந்த கோட்பாட்டில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்திருப்பதாகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதனை வெளிப்படுத்தி இருப்பதாகவும் ஆளுனர் உரையிலும் அதனை எழுத்துப்பூர்வமாக முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் பெ.சண்முகம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், ஆவணப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற அரசை வலியுறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
