பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருந்தாலும், இது தாமதமாகக் கிடைத்த நீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்த கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கையாக இருக்கும்.
இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை. 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுக்க உதவிய அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.
இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை..
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதிகிடைத்திருந்தாலும், இது தாமதமான நீதி. 6 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததுதான். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தாமதமாக அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் முதல் புகார் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தான் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளில் தண்டனை விரைவாக கிடைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் சிறப்பு நீதிமன்றம், 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பின் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கிய ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும். குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க: கூவாகத்தில் அழகிப் போட்டி கோலாகலம்… பட்டத்தை தட்டிச் சென்ற நெல்லை ரேணுகா…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் பல காரணங்களால் புகார் அளிக்க முன்வரவில்லை. இப்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பல பெண்கள் துணிச்சலாக புகார் கொடுக்க முன்வரலாம். அவ்வாறு முன்வரும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.