அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “2006ல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றாலும், இதுவரை எங்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைக்கு எதிராக, ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளது.
அந்த இடைக்கால தடை உத்தரவால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறை சட்டப்படி, அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு தனிப்பட்ட பட்டப்படிப்பு வயது வரம்பு வரையறுக்கப்படவில்லை. அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களை பணி நியமனம் செய்யலாம் என்று விதி உள்ளது.
இதையும் படிக்க: “குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது..” பொள்ளாச்சி தீர்ப்பு குறித்து நயினார் நாகேந்திரன்!
ஆனால், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றும், மூத்த அர்ச்சகர்கள் கீழ் கோயில்களில் பயிற்சி பெற்ற பின்னரும், நாங்கள் அர்ச்சகராக நியமனம் செய்யப்படவில்லை. எனவே, முறையாக பயிற்சி பெற்ற எங்களை தகுதியின் அடிப்படையிலும், இந்து அறநிலையத்துறை நடத்திய தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். இதற்கு ஏதுவாக, இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். எனவே, இந்த இடையீட்டு மனுவை ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.