பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அந்த தீர்ப்புக்கு எதிரான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதைக் கண்டித்து, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரவைப் பிரதிநிதிகள் கூறியதாவது:

  • திருநெல்வேலியைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த ஒருவர், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு இடைநிறுத்த உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தமிழக அரசின் அதிகாரத்தை மறுக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தளர்த்தும் வகையிலும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கையாகும்.
  • இத்தீர்ப்பை திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. மக்கள் விரோதமான இந்த உத்தரவை வழங்கிய நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாதனை குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
  • தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக தமிழக அரசு செயல்படும்போது, நீதிமன்றங்கள் வழியாக அதை தடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவை சீர்திருத்தங்களுக்கு எதிரான மனப்பாங்கை பிரதிபலிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையிலான பல்வேறு அமைப்புகள் கோவையில் கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த போராட்டங்களை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version