பொள்ளாச்சி அருகே மனநல காப்பகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட்’ எனும் தனியார் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மர்மமாக காணாமல் போன விவகாரம் தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.
சோமனூரைச் சேர்ந்த 22 வயதான வருங்காந்த் என்ற இளைஞர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். மே 15ஆம் தேதி, சுற்றுலா செல்வதற்காக ஆழியார் பகுதியுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், இளையஞர் காணாமல் போனதாகவும் தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மே 16ஆம் தேதி தந்தை ரவிக்குமார் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மகனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். முக்கியமாக, இளைஞரின் புகைப்படம் மற்றும் அடையாள விவரங்களுடன், இரு தொலைபேசி எண்கள் கொடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வந்த காவல் விசாரணையில், இளைஞர் காப்பகத்திலேயே அடித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அவரது சடலம் மே 12ஆம் தேதி காப்பகத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு, நடுப்புணி – பி.நாகூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்டது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், ஒரு JCB வாகனம் மற்றும் கருப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய கார் சம்பந்தப்பட்டதாகவும், அந்த வாகனங்களில் பெண் மருத்துவர் கவிதா உள்ளிட்டோர் பயணித்ததாகவும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை பி.நாகூர் தோட்டம் பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். சடலம் இருப்பதாக கூறப்படும் இடத்தில், சுற்றியுள்ள 1 கி.மீ. வரையில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தை தோண்டிய பின் மட்டுமே, சடலத்தின் இருப்பு உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.